அம்பானியை விட அதிக சம்பளம்.. யாருப்பா இந்த ரவி குமார்?

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant) நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் பிரயன் ஹம்ப்ரீஸ் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ள சூழலில், காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரவி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி மாற்றம் சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக காக்னிசன்ட் நிறுவனத்தில் பிரயன் ஹம்ப்ரீஸ் மார்ச் 15ஆம் தேதி வரை சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என காக்னிசன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானியை விட, காக்னிசன்ட் புதிய தலைவர் ரவி குமாருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காக்னிசன்ட் நிறுவனத்தில் ரவி குமாருக்கு ஆண்டுக்கு 57 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு தற்போது ஆண்டுக்கு சுமார் 15 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. அம்பானியை காட்டிலும் கிட்டத்தட்ட 4 மடங்கு சம்பளம் வாங்கப்போகிறார் ரவி குமார்.

இதுமட்டுமல்லாமல், காக்னிசன்ட் நிறுவனத்தில் தலைமை பதவிக்கு இணைந்ததற்காகவே ரவி குமாருக்கு போனஸ் தொகையாக 7.5 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய்) வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவி குமாருக்கு ஆண்டுக்கு 7 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 57 கோடி ரூபாய்) சம்பளம் வழங்கப்படும். இதில் அவருக்கான 1 மில்லியன் டாலர் அடிப்படை சம்பளமும் அடங்கும். இதுபோக 7.5 லட்சம் டாலர் போனஸ். ஆண்டுக்கு 11.5 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள். இதுபோக 2 மில்லியன் டாலர் ஊக்கத்தொகையும் உண்டு.

யார் இந்த ரவி குமார்?

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர் ரவி குமார். இதில் 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022 அக்டோபர் வரை இன்ஃபோசிஸ் தலைவராக பதவி வகித்தார். ஐடி துறையில் பல்வேறு உட்துறைகளில் நல்ல அனுபவம் பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published.