ஜன. 31 – ஏப். 6 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு!

“நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறும்,” என, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்து உள்ளார்.

மொத்தம் 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு வரும் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் அமர்வு மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வரை மொத்தமாக 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும். குடியரசுத் தலைவர் உரை, தொடர்ந்து பட்ஜெட் தாக்கல், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பட்ஜெட் அமர்வின் போது, பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் தேதி வரை விடுமுறை. இந்த நேரத்தில் துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மானியங்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்து, அமைச்சகங்கள் / துறைகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.