திங்கள் நகர் தேர்வுநிலை பேரூராட்சி முன்பு மீன் தொழிலாளிகள் குவிந்ததால் பரபரப்பு………

திங்கள்நகர் தேர்வுநிலை பேரூராட்சி கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவர் சுமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திங்கள்சந்தையில் உள்ள மீன் கடை ஸ்டால்களை தனித்தனியாக ஏலம் விட தீர்மானம் வாசிக்கப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீன் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்நகர் பேரூராட்சி முன்பு திடீரென குவிந்தனர். இதையடுத்து தலைவர் சுமன், செயல் அலுவலர் அம்புஜம் ஆகியோர் மீன் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் ஆன்றனி, துணைத் தலைவர் டேவிட், செயலாளர் தினேஷ், பொருளாளர் ஜின்டோ ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென மீன் தொழிலாளர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திங்கள் நகரில் மீன் கடை ஸ்டால்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.