அரசு ரப்பர் கழக ஊழியர் பலியான விவகாரத்தில் திடீர் திருப்பம்….

பூதப்பாண்டியை அடுத்துள்ள தடிக்காரன்கோணம் பத்மநாபநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவருக்கு மீனாகுமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜ்குமார் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக கோட்டத்திற்கு உட்பட்ட பரளியாறு பிரிவில் களப்பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ராஜ்குமார் மேற்பார்வையில் பரளியாறு ரப்பர் தோட்டம் பகுதியில் எந்திரம் மூலம் ரப்பர் மரத்தை சுற்றியுள்ள புற்களை வெட்டும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எந்திரத்தில் பொறுத்தப்பட்டிருந்த வால் பகுதி உடைந்து ராஜ்குமார் மார்பு பகுதியை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். முதலில் அந்த எந்திரத்தை ராஜ்குமார் இயக்கி கொண்டிருந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த எந்திரத்தை வடமாநில தொழிலாளி ஒருவர் இயக்கியது தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில், ராஜ்குமாரின் தம்பி சுஜிக்குமார் (40) கீரிப்பாறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். இதில் கோட்ட மேலாளர், வேலை செய்ய எந்த ஒப்பந்தமும் செய்யாமல் தன்னிச்சையாக வடமாநில தொழிலாளரை பணியில் அமர்த்தி வேலை செய்து வருகிறார் என்று ெதரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் எந்திரத்தை இயக்கிய வடமாநில தொழிலாளர் சந்தீப் மற்றும் கோட்ட மேலாளர் பிரபாகரன் மீது கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே கோட்ட மேலாளர் பிரபாகரன் தலைமறைவானார். மேலும், இந்த சம்பவத்தில் எந்திரத்தை இயக்கி கொண்டிருந்த சந்தீபும் காயமடைந்தார். இதனால் அவர் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.