குமரியில் நடந்த நூதன ஸ்கேம்……ஆதார் கார்டு விவரங்களை வைத்து ரூ.80 லட்சம் மோசடி..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செல்போன் வாங்குவதற்காக கொடுத்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அருள் பிரசாத் என்பவரிடம் கேசவன் புதூர், எட்டாமடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் செல்போன் வாங்க சென்றுள்ளனர். செல்போன் எண் வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளதாம்.
வாடிக்கையாளர்கள் அளித்த ஆதார் கார்டு விவரங்களை பல்வேறு பொருட்களை தவணை முறையில் வாங்கி இந்த மோசடியை அருள் பிரசாத் அரங்கேற்றியுள்ளார். இந்த மோசடி சம்பவம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கடன் வாங்கியிருப்பதாக மெசேஜ்
தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் அருள்பிரசாத் என்பவரிடம் கேசவன் புதூர், எட்டாமடை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் சலுகை விலையில் செல்போன் வாங்குவதற்காக ஆதார், பான் எண் மற்றும், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட விவரங்களை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படி செல்போன் வாங்கிய இளைஞர்கள் பலருக்கும் தனியார் கடன் நிறுவனத்தில் கடன் பெற்று பொருட்கள் வாங்கியதாக எங்களது செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்பு மெசேஜ்கள் வந்துள்ளன.
சுமார் ரூ.80 லட்சம் வரை மோசடி
இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் பலரும் நாம்தான் எந்த பொருட்கள் எதுவும் வாங்கவில்லையே.. பிறகு பணம் கட்ட வேண்டும் என மெசேஜ் வந்துள்ளதே என விசாரித்து பார்த்துள்ளனர். இதில், அருள் பிரசாத் என்பவர், செல்போன் வாங்குவதற்காக ஆவணங்களை கொடுத்தவர்களின் விவரங்களை பயன்படுத்தி தவணை முறையில் ஏராளமான பொருட்களை வாங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் வாங்கிய பொருட்களுக்கு தவணைத் தொகையை முறையாக கட்டாமல் இருந்துள்ளார். இப்படி சுமார் ரூ.80 லட்சம் வரை மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதையடுத்து அருள் பிரசாத்திடம் பாதிக்கப்பட்ட நபர்கள் விசாரிக்க சென்றுள்ளனர். ஆனால், அருள் பிரசாத் வெளிநாடு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அருள் பிரசாத்தின் பெற்றோரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களும் முறையாக பதில் அளிக்கவில்லையாம். இன்னும் பலரிடம் அருள் பிரசாத் மோசடி செய்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள இளைஞர்கள் இது தொடர்பாக நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் வாங்குவதற்காக அளித்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி நடைபெற்ற இந்த மோசடி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓடிபியை பகிரக்கூடாது
ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களை பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் எத்தகைய முறைகேடுகள் நடைபெறும் என்பதை கண் முன்னே வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதனால், ஆதார், பான் கார்டு விவரங்களை அளிக்கும் முன்பாக பகிரும் நபர்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் தான் பயன்படுத்துகிறாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஓடிபி விவரங்களையும் உறுதிப்படுத்தாமல் பகிர்ந்து விடக்கூடாது என்று பலரும் விடுக்கும் எச்சரிக்கையாக உள்ளது.