“கோலிக்கு செய்ததை ரோகித்திற்கு செய்யனும்”.. இலங்கை தொடரில் மோசமான சாதனை.. கம்பீர் கடும் விளாசல்!

திருவனந்தபுரம்: இந்திய அணியில் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட கடுமையான காலத்தை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3 – 0 என ஒயிட் வாஷ் செய்து அசத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மோசமாக அவுட்டானது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 390 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இலங்கை அணி கொஞ்சம் கூட சவால் கொடுக்காமல் 73 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த தொடரில் பேட்டிங்கில் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல் மற்றும் பவுலிங்கில் சிராஜ், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் என பலரும் ஃபார்மை காட்டிவிட்டனர். ஆனால் கேப்டன் ரோகித் மட்டும் வருத்தத்தை கொடுத்துள்ளார்.

என்ன காரணம்
இந்த தொடரின் முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய அவர் 67 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதே போல 3வது போட்டியில் 42 ரன்களை அடித்தார். ஆனால் அவரால் சதத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்யவில்லை. தன்னுடைய கடைசி 50 சர்வதேச இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தை கூட அடிக்காமல் ரோகித் சர்மா ஏமாற்றி வருகிறார். இதனால் அவரின் ஃபார்ம் மீது கேள்விகள் எழுந்து வருகின்றன.
கம்பீரின் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து கம்பீர் பேசியுள்ளார். அதில், 50 இன்னிங்ஸ்களாக சதமடிக்காமல் இருப்பது என்பது மோசமான தகவலாகும். ஓரிரு தொடர்களில் சதம் அடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. என்னப்பொறுத்தவரையில் விராட் கோலி மூன்றரை ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்த போது எப்படிபட்ட நடவடிக்கைகளை எடுத்தோமோ, அதே போன்ற விஷயங்களை ரோகித்திற்கும் செய்ய வேண்டும். சற்று கடுமையாக இருந்தால் தான் சரிவரும்.

அவரின் தவறு
கடந்த 2019ம் ஆண்டு ரோகித் செய்த விஷயங்கள் தற்போது இல்லை. அவர் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். சரியான பந்துகளை தேர்வு செய்து சரியான ஷாட்களை ஆடுகிறார். ஆனால் அதனை பெரிய ஸ்கோராக மாற்றுவதில் தான் தடுமாறுகிறார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் உலகக்கோப்பைக்கு மிக முக்கியம். கோலி மீண்டும் கம்பேக் தந்துவிட்டார். ஆனால் சீக்கிரமாக ரோகித் கொடுக்க வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.
2019ல் ரோகித் சம்பவம்
கடந்த 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா ஆடிய ருத்ர தாண்டவத்தை இன்று வரை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். 9 போட்டிகளில் 648 ரன்களை விளாசி ஆச்சரியம் தந்தார். இதில் 5 சதங்களும் அடங்கும். இந்த முறை இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறுவதால் இன்னும் ஒருபடி மேல் செல்வாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.