மீண்டும் உக்கிரம் அடையும் ‘உக்ரைன் ரஷ்யா போர்’.. மழை போல பொழிந்த ஏவுகணைகள்.. அதிர்ந்த கீவ் நகரம்!
கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மேற்கத்திய நாடுகளின் உதவியால் தொடர்ந்து ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், திடீரென ரஷ்யா உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முன்னாள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்து தற்போது தனி நாடாக இருக்கும் உக்ரைன் திட்டமிட்டது.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று எண்ணிய ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. ஏறத்தாழ ஒரு வருடத்தை நெருங்கி விட்ட போதிலும் போர் தற்போது வரை நீடித்து வருகிறது.

உக்ரைனும் சளைக்காமல் பதிலடி :
போரின் துவக்கத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி வந்த ரஷ்யா பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், மின்நிலையங்கள் என தாக்குதல்களை வேகமாக தொடுக்க தொடங்கியது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான சண்டையில் ரஷ்யாவின் கையே ஒங்கி இருந்தாலும் உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், ரஷ்யாவுக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தொடரும் போர் :
உக்ரைனின் சில இடங்களை கைப்பற்றுவதும் பின்னர் அதை உக்ரைன் மீட்டெடுப்பதும் என போர் தொடர்ந்து கொண்டே வருகிறது. வலிமையான ராணுவ கட்டமைப்பை கொண்ட ரஷ்யாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரமாக முயன்றன. ஆனால் உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பால் ரஷ்யாவின் கனவு இன்னும் கானல் நீராகவே உள்ளது.

அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்கள் :
இதனால், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது கவனத்தை திருப்பியிருக்கும் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல்கள் மூலம் பல நகரங்களை ஆக்கிரமித்தன. இந்த நிலையில் தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்கின. மழை பொழிந்த ரஷ்ய ஏவுகணைகளால் தலைநகர் கீவ் நகரம் அதிர்ந்தது. ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. 18 வீடுகளும் இடிந்தன.
கூடுதல் ஆயுதங்கள் தேவைப்படுவதாக :
உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை. இதனிடையே, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இருக்கும் டொனாஸ்டாக் மாகாணத்தில் உள்ள சோலிடர் நகரத்தை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. எனினும், உக்ரைன் இதை மறுத்துள்ளது. இதனிடையே ரஷ்யாவின் இந்த தீவிர தாக்குதலை சமாளிக்க கூடுதல் ஆயுதங்கள் தேவைப்படுவதாக மேற்கத்திய நட்பு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5 பேர் பலி, 60 பேர் காயம் :
ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாகி இருப்பதால் உக்ரைனின் பல இடங்களும் இருளில் மூழ்கியுள்ளன. கார்கிவ், லிவி, இவனோ பிரான்கிவ்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரக் கட்டமைப்புகள் மீது ரஷ்ய படைகள் தாகுதல் நடத்தியிருப்பதகா உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வரும் நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் எனவும் அவர் கூறினார். ரஷ்யாவின் கிழக்கு மற்று மத்திய நகரங்களான ட்னிபோரேவில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியானதாகவும் 60 பேர் வரை காயம் அடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலை சமாளிக்க இங்கிலாந்து ஆயுதங்களையும் அளித்துள்ளது.